Tuesday, December 24, 2024
HomeFree softwareசந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி !

சந்திப் பிழையை சரி செய்திட உதவும் இணையச் செயலி !

தற்காலத்தில் தமிழில் பேசுவதே பெரும்பாடாக நினைக்கும் மனநிலையில் மக்கள் வந்து விட்டனர். அந்தளவிற்குத் தமிழ் அல்லாத மற்ற மொழிகளின் மீது மோகம் கொண்டுள்ளனர். இந்த நிலைமையில் தமிழில் எழுதுவதும் அரிதாகிக் கொண்டு வருகிறது. இது ஒரு கசப்பான உண்மை என்றபோதும், அவ்வாறு தமிழில் கவிதை, கட்டுரைகளை எழுதிடும்  சந்திப்பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நன்றாகத் தமிழ் கற்றவர்கள் கூட எழுதிடும்போது ஏற்படும் சந்திப்பிழைகளைக் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

அவ்வாறானவர்களுக்கு ஆங்கிலத்தில் சொற்களைச் சீர் செய்வது போல, தமிழ் வாக்கியங்களில் ஏற்படும் சந்திப் பிழைகளைச் சரி செய்திடவென தமிழறிந்த, கணினி கற்றுணர்ந்த வல்லுநர் ஒருவர் அதற்கென ஒரு இணைய வழி செயலியை உருவாக்கி, பயன்பாட்டிற்கு விட்டுள்ளார்.

அந்தச் செயலியைப் பயன்படுத்தி தமிழில் ஏற்படும் சொற்பிழை, சந்திப்பிழைகளை அழகாக இலக்கண நயத்தோடு திருத்திப் பயன்படுத்தலாம்.

இணையத்தில் எத்தனையோ பயன்மிக்க சேவைகள் உள்ளன. கணக்கீடுகளைச் செய்ய, ஓவியம் வரைய, தமிழில் எழுதியவற்றைப் பேச்சுத் தமிழாகக் கேட்க என இலவச இணையச்சேவைகள் நிரம்ப உள்ளன.

அதுபோல தமிழில் எழுதுவதற்கும் இணைய வழிக் கருவிகள் (online tools) உள்ளன. ஆனால் தமிழ் திருத்தி செயலிகள் (Tamil Editor applications) மிகக் குறைவு. அந்த வகையில் தமிழில் உள்ள சந்திப்பிழைகள், மரபு பிழைகள், ஒற்றுப்பிழைகளைத் திருத்த ஒரு அரிய, அற்புதமான இணையச்செயலியை வடிவமைத்து வழங்கியுள்ளனர்.

தமிழ் வாக்கியங்களில் உள்ள சந்திப் பிழைகளை நீக்கவும், மரபு பிழைகளைக் கண்டறியவும் பயன்படுகிறது இச்செயலி.

tamilil-santhi-pilai-thiruthum-software
இதன் மூலம் தமிழில் சந்திப்பிழைகளைத் திருத்த முடியும். ஒற்றெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள், மரபு பிழைகள், வடமொழிச் சொற்கள் போன்ற பிழைகளைக் கண்டறியலாம்.


இலக்கண விதிப்படி எந்தெந்த இடங்களில் ஒற்றெழுத்து வரும், எந்தெந்த இடங்களில் ஒற்றெழுத்து வரக்கூடாது என்பதை நிர்ணயித்துக் காட்டுகிறது.

பயன்படுத்தும் முறை:

கீழுள்ள சுட்டியைச் சொடுக்கித் தோன்றும் இணையப்பக்கத்தில் உள்ள கட்டத்தில், நீங்கள் தட்டச்சிட்ட தமிழ் வாக்கியங்களை அதில் உள்ளிடவும். பிறகு  கட்டத்திற்குக் கீழுள்ள “ஆய்வு செய்” என்ற பொத்தானை அழுத்தவும்.

பரிந்துரை,  சந்தேகிப்பவை, ஒற்றுப்பிழை, மரபுப்பிழை, என நீங்கள் உள்ளிட்ட வாக்கியங்களில் உள்ள பிழைகளை எண்ணிக்கையுடன் வகைப்படுத்திக் காட்டும்.

நான் உதாரணத்திற்காக இப்பதிவின் தலைப்பை அதில் “தமிழில் சந்திப் பிழை திருத்தும் இணையச் செயலி” எனக் கொடுத்து ஆய்வு செய் பொத்தானை அழுத்தியதும், அதில் ஒரு ஒற்றுப்பிழையைச் சுட்டிக்காட்டியது. இறுதியாகச் சம்மதம் எனப் பொத்தானை அழுத்தியவுடன், “தமிழில் சந்திப் பிழை திருத்தும் இணையச் செயலி” எனத் திருத்தப்பட்ட வாக்கியத்தைக் காட்டியது.

பிழைகளைக் காட்டும் வார்த்தைகளின் மீது சொடுக்கினால், அதற்கான இலக்கண விதிகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

மிகவும் பயனுள்ளதாக இந்தச் செயலி அமைந்துள்ளது.

நீங்களும் உங்களது தமிழ் வாக்கியங்களில் உள்ள சந்திப்பிழைகளைத் திருத்தவும், பிழைகளை அறிந்துகொள்ளவும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்.

சுட்டி: சந்திப்பிழை திருத்தி


Tags: Tamil editing program, Tamil grammar correction tool, Tamil Grammar tools, Tamil Grammar correction, Tools for Tamil Grammar.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments