ஸ்மார்ட் போன்களில் தொழில் நுட்ப திறன் தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், நமக்குக் கிடைக்கும் வசதிகளும் பல வகைகளில் பெருகி வருகின்றன. சென்ற ஆண்டில், நமக்குத் தரப்பட்ட வசதிகளை இங்கு தொகுத்துப் பார்க்கலாம்.
இந்த, 2017 ஆம் ஆண்டில், இவை இன்னும் பல்வேறாகப் பெருகும் என எதிர்பார்க்கலாம். இப்போது நாம் அனுபவிக்கும் பல வசதிகளை, இதுவரை தங்கள் போன்களில் பெறாதவர்கள், அடுத்து ஸ்மார்ட் போன்களை வாங்குகையில், இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களுக்கான போன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
விரல்ரேகை அறிதல்
ஸ்மார்ட் போன்களைத் திறப்பதில், விரல் ரேகையைப் பயன்படுத்துவது தற்போது பரவலாகத் தரப்பட்டு வருகிறது. முதலில், ஒரு சில நிறுவனப் போன்களில் மட்டுமே, இது தென்பட்டாலும், பின்னர், அனைத்து நிறுவனங்களும் இதனைத் தங்கள் ஸ்மார்ட் போன்களில் இதனைக் கொண்டு வந்தன.
தற்போது ஆப்பிள் ஐபோன் 6 எஸ், சாம்சங் காலக்ஸி எஸ் 6, காலக்ஸி எஸ் 6 எட்ஜ், எல்.ஜி. ஜி4, எச்.டி.சி. ஒன் எம் 9 மற்றும் பல போன் மாடல்களில் இந்த வசதி தரப்பட்டுள்ளது.
நடப்பாண்டில், இந்த தொழில் நுட்பம், ரூ.10,000க்கும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படும் போன்களில் கூட கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். 2016 ஆம் ஆண்டில் வெளி வந்த அனைத்து மோட்டோ (MOTO) போன்களிலும், விரல் ரேகை ஸ்கேனர்கள் தரப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இவற்றின் திரைகளும் குறைந்தது 5 அங்குல அளவில் இருக்கும்.
முப்பரிமாண தொடுதல் வசதி
முப்பரிமாண தொடுதல் தொழில் நுட்பம் (3D touch technology) முதலில் ஆப்பிள் ஐபோன் 6 எஸ் மாடலில் அறிமுகமானது. இதனைப் பயன்படுத்திப் பல பயனாளர்கள் தாங்கள் விரும்பும் ஷார்ட் கட் வழிகளை உருவாக்கிப் பயன்படுத்தினர். இதற்கு பல அளவில் விரல் அழுத்தங்களைக் கொடுத்து வடிவமைக்கின்றனர்.
இந்த தொழில் நுட்பத்தினைப் பெரிய அளவில், சாம்சங் மற்றும் ஸியோமி போன்கள் கொண்டுள்ளன. ஹுவே நிறுவனம், தன் Huawei Mate S மாடல் போனில் இந்த தொழில் நுட்ப வசதியை வழங்கியுள்ளது. இதனை force touch technology என இந்நிறுவனம் பெயரிட்டுள்ளது.
ஓ.ஐ.எஸ். தொழில் நுட்பம் (OIS (optical image stabilization)).
இந்த தொழில் நுட்பம் சொல்லிக் கொள்ளும் அளவில் பரவவில்லை. 2015ல், சில நிறுவனங்கள் இந்த தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்திப் பார்த்தன. ஆனால், படங்கள் தெளிவில்லாமல் இதில் காணப்பட்டதால், இந்த தொழில் நுட்பம் 2016ல் செம்மைப்படுத்தப்பட்டது.
இது குறைந்த வெளிச்சத்தில் படங்களை எடுக்க உதவிடும் தொழில் நுட்பமாகக் கையாளப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் கொண்ட போன்களாக, சாம்சங் காலக்ஸி எஸ் 6 மற்றும் அந்த வரிசையில் வந்தவை, ஆப்பிள் ஐபோன் 6 எஸ் ப்ளஸ், ஒன் ப்ளஸ் 2 மற்றும் சிலவற்றைக் கூறலாம்.
அதிக ரெசல்யூசன் கொண்ட டிஸ்பிளே
2014 ஆம் ஆண்டில், எல்.ஜி. ஜி 3 மாடல் போனில், 2கே டிஸ்பிளே திரை தரப்பட்டது. அதன் பின்னர், பெரிய நிறுவனங்கள் உட்பட, அனைத்து நிறுவனங்களும் இதனை அறிமுகம் செய்வதில் முனைந்தன. சோனி தன்னுடைய உயர் ரக மாடல் போனான Sony Xperia Z5 Premiumல் 4கே டிஸ்பிளேயைத் தந்தது. 2016ல், இந்த வகையில் 4 கே டிஸ்பிளே கொண்ட போன்களை எதிர்பார்க்கலாம்.
யு.எஸ்.பி. டைப் ‘சி’ (Type C)
எந்த வகையாகவும், இணைத்துப் பயன்படுத்தும் வசதியான USB Type- C வசதி சென்ற ஆண்டில் பல போன்களில் இடம் பெற்றது. இதனைச் சில பெயர் பெற்ற மாடல் போன்கள் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒன் ப்ளஸ் 2, எல்.ஜி. நெக்சஸ் 5 எக்ஸ், ஹுவே நெக்சஸ் 6 பி, சியோமி எம்.ஐ.4 சி, லூமியா 950 மற்றும் 950 எக்ஸ்.எல்., ஆகியவை அவற்றில் சிலவாகும்.
இந்த வகை யு.எஸ்.பி. பயன்படுத்துவதில் பல நன்மைகள் உள்ளன. இந்த போர்ட்டில், யு.எஸ்.பி. ப்ளக் செருகுவதை எந்த பக்கத்திலும் மேற்கொள்ளலாம். மேலும், இது வேகமாக சார்ஜ் செய்திடும். இது யு.எஸ்.பி. 3 வகைக்கு இணையானதாகும். ஆப்பிள் இதனைத் தன் மேக் புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தியுள்ளது.
அடுத்து, தன் ஐபோன்களிலும், ஐ பேட் சாதனங்களிலும் இதே வகை யு.எஸ்.பி. போர்ட்டைப் பயன்படுத்தி வருகிறது. தொடர்ந்து அனைத்து ஸ்மார்ட் போன்களிலும், இதுவே மாறாநிலை போர்ட்டாக அமையும் வாய்ப்புகளும் உள்ளது.
ராம் மெமரி 3 ஜி.பி. ஆனது
2015 பின் பகுதியில் வந்த சில ஸ்மார்ட் போன்களின் ராம் மெமரி, 3 ஜி.பி. என்ற அளவில் இருந்தன. முன்பு, ஸ்மார்ட் போனில் பலவகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ள, 2 ஜி.பி. ராம் மெமரி தேவை என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பின் நாளில், 3 ஜி.பி. ராம் மெமரி என்பது கட்டாயத் தேவையானது. இப்போது சில மாடல்களில், இது 4 ஜி.பி. ஆகவும் உள்ளது. 2017ல், அதிக ராம் மெமரி இருப்பது கட்டாயத் தேவையாகப் பயனாளர்கள் எதிர்பார்ப்பார்கள். இதனை, அனைத்து நிறுவனங்களும் அமல்படுத்தும் என்பது உறுதி.
ஸ்டோரேஜ் திறன்
இனி வரும் போன்களில், குறைந்த பட்ச ஸ்டோரேஜ் திறன் 32 ஜி.பி. ஆக இருக்கும். இதுவரை 16 ஜி.பி. கொள்ளளவு கொண்டு போன்கள் கிடைத்தன. இதில், நாம் பயன்படுத்த 12 ஜி.பி. கிடைக்கும். சில வாரங்கள் பயன்படுத்தினாலே, இது நமக்குப் போதாது என்று புரிந்துவிடும்.
இந்த அடிப்படையில், போன் தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்டோரேஜ் திறனின் குறைந்த பட்ச அளவினை 32 ஜி.பி. ஆக அமைத்து வருகின்றன. இதுவே, அனைவராலும் பயன்படுத்தப்படும் அளவாக அமையும். உயர் ரக மாடல் போன்களில், இது 64 ஜி.பி. ஆகவும் இருக்கும்.
விரைவாக சார்ஜிங்
சார்ஜிங் வேகம் என்பது, நாம் பயன்படுத்தும் சார்ஜர் எத்தனை ஆம்பியர் மின் சக்தியை வெளிப்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. இப்போது ஸ்மார்ட் போன்களுடன் வரும் சார்ஜர்கள் அனைத்தும் ஒரு ஆம்பியர் அவுட்புட் தருவதாகவே உள்ளன. இதுவே 2 ஆம்பியர் எனில், இரு மடங்கு வேகத்தில், போனை சார்ஜ் செய்திட முடியும்.
இனி, வருங்காலத்தில், ஸ்மார்ட் போன்களுக்கு 2 ஆம்பியர் அவுட்புட் உள்ள சார்ஜர்களே தரப்படும் என எதிர்பார்க்கலாம். மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்பங்கள் அனைத்தும், தற்போது உயர் நிறுவனங்கள் தயாரிக்கும் மேம்படுத்தப்பட்ட மாடல் போன்களில் காணப்படுகின்றன. இந்த ஆண்டில், இவை அடுத்த நிலை போன்களிலும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.