Wednesday, January 22, 2025
Homeandroid appபார்வையற்றோருக்கு உதவும் செயலி | சிவகங்கை மாணவர்கள் அசத்தல்

பார்வையற்றோருக்கு உதவும் செயலி | சிவகங்கை மாணவர்கள் அசத்தல்

பார்வையற்றோரை ஏமாற்றுவதை தடுக்கும் வகையில் அலைபேசி செயலியுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தை சிவகங்கை கல்லுாரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

parvai atrorukku uthavum seyali

பார்வையற்றோர், காதுகேளாதோர், பேச முடியாதோர், முதியோர்கள் பலர், மற்றவர் துணையின்றி செயல்பட முடிவதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் ‘மைஸ்டிக் ஆப்’ என்ற அலைபேசி செயலியுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தை, சிவகங்கை அருகே அரசனுார் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லுாரி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் எம்.சரண் உள்ளிட்ட 7 பேர் உருவாக்கியுள்ளனர்.

இந்த செயலியில் பெயர், ஆதார் எண் போன்ற விபரங்களை பதிவு செய்தால் போதும். அரசின் நலத்திட்டங்கள், அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். தபால்நிலையம், வங்கிகள் மூலம் கிடைக்கும் பண விபரம் அறிய முடியும். சாதாரண போன் பயன்படுத்துவோருக்கு எஸ்.எம்.எஸ்., எனும் குறுந்தகவல் சென்றுவிடும். பார்வையற்றோருக்கு குரல் ஒலி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

மாணவர் சரண் கூறியதாவது:

இந்த செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ பதிவிறக்கம் செய்யலாம். பார்வையற்றோரின் அலைபேசியுடன் ‘ஐ.ஓ.டி.,’ என்ற கருவி இணைக்கப்படும். இதில் ஏழு பொத்தான்கள் இருக்கும். நடந்து செல்லும்போது ஏற்படும் தடைகளை ‘சென்சார்’ மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

ஜி.பி.எஸ்., கருவி இருப்பதால் குரல் ஒலி மூலம் இடத்தை அறிந்து கொள்ளலாம். ஒருவரது குரல் மூலம், அவர் ஏற்கனவே அறிமுகமானவரா என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இதனால் பார்வையற்ற பெண்களை வேறு நபர்கள் ஏமாற்ற முடியாது.

வாய்பேசாதோர், காதுகேளாதோர், முதியோர்களுக்கு, அவர்கள் தினமும் பயன்படுத்தும் 20 கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அலைபேசியில் அதை தொட்டால் போதும், அது குரல் ஒலியாக கேட்கும். மேலும் ‘டைப்’ செய்யும் வார்த்தை, ஒலியாக மற்றவர்களுக்கு கேட்கும். மேலும் பல வசதிகளையும் ஏற்படுத்த ஆய்வு செய்து வருகிறோம்.

இந்த கண்டுபிடிப்புக்காக மாநில அளவில் நடந்த ‘ஆரம்பம் டாட் இன்னின் பெஸ்ட் ஐடியா’ மற்றும் ‘ஆப் கார்னிவல்‘ போட்டியில் முதலிடம், தேசிய அளவில் ‘கூகுள்’ சார்பில் நடந்த போட்டியில் இரண்டாமிடம் பெற்றோம், என்றார்.

மாணவர்களையும், உதவியாக இருந்த துறைத்தலைவர் ஆதிரயன், உதவி பேராசிரியர்கள் ரஹ்மத்அலிகான், கருப்பணன் ஆகியோரை கல்லுாரி நிர்வாக இயக்குனர் வரதராஜன், முதல்வர் சீனிவாசராமன் பாராட்டினர்.

நன்றி: தினமலர்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments