இந்த கேட்ஜெட்டின் உதவியுடன் பார்வை குறைபாடுள்ளவர்கள் படிக்க முடியும். தங்கு தடையின்றி பாதையில் நடக்க முடியும். எதிரே இருக்கும் பொருள் இன்னதென அறிந்துகொள்ள முடியும். எதிரே வரும் நபர்கள் அறிமுகமானவர்களா என்பதை கூட இந்த கேட்ஜெட் அடையாளப்படுத்திடும்.
இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய கேட்ஜெட்டின் பெயர் ‘MY EYE’. இதை OrCam என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
MY EYE ஒரு விரல் போன்ற கருவி. சிறியது மற்றும் எடை குறைவானது (22.5 கிராம்கள் மட்டுமே). இது வழக்கமாகப் பயன்படுத்தும் கண்ணாடிகளுடன் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் கேமரா, மற்றொரு பக்கம் ஒலிபெருக்கி (Speaker), இவற்றை இணைக்கும் மற்றும் தகவல்களை வார்த்தைகளாக மாற்றும் அமைப்பு, இவற்றோடு பேட்டரி என இவ்வளவுதான் அந்த ஒட்டுமொத்த கருவியும்.
போகுமிடங்களில் உள்ளதையெல்லாம் கேமரா படமெடுத்து அனுப்ப, அதை உடனடியாக ஆராய்ந்து, அந்தத் தகவலை அதை அணிந்தவரின் காதில் சொல்லிவிடும். படிப்பதற்கு, தெரிந்தவரை அடையாளம் கண்டுகொள்வதற்கு, என்ன பொருள் எனத் தெரிந்துகொள்வதற்கு என அனைத்து வகையிலும் உதவக்கூடியது.
செல்லும் இடங்களில் எத்தனையோ இடர்பாடுகள்/பொருட்கள் இருக்கும். அவை அனைத்தையும் படித்து குழப்பிவிடும் என நினைக்க வேண்டாம். எதைப் படிக்க வேண்டும் அல்லது எதைப்பற்றி அறிய வேண்டுமோ அதை விரலால் சுட்டிக்காட்டிய பின்னர் அதைப் படித்துக் காண்பிக்கும் (Touch Reading).
உதாரணமாக ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டுமெனில், புத்தகத்தை திறந்து அதில் படிக்க வேண்டிய வரியின் மீது கைவிரல் வைத்த பிறகு படிக்க தொடங்கும். நிமிடத்திற்கு 150 முதல் 160 வார்த்தைகளைப் படிக்கும் வேகத்தைக் கொண்டது.
இந்த வேகத்தை 250 வார்த்தைகள் வரை நமக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். புத்தகங்கள், செய்தித்தாள்கள், கணினி அல்லது செல்போன் திரையில் உள்ளவை என அனைத்தையும் இது படித்துச் சொல்லும். இந்தக் கருவி பார்வையை இழந்தவர்கள் மட்டுமல்லாது, படிப்பதற்குச் சிரமப்படுபவர்களுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.
தனக்குத் தெரிந்தவரின் முகத்தை அடையாளம் காணும்விதம் இன்னும் ஆச்சர்யத்திற்கு உரியது. முதல்முறை ஒருவரைச் சந்திக்கும்போது அவரது பெயரை நீங்கள் சொன்னால், அவரது முகம் மற்றும் பெயரை அப்படியே பதியவைத்துக்கொள்ளும்.
தேவையற்ற பெயர்கள் பதிவாகுமெனக் கவலை வேண்டாம். நீங்கள் கைகாட்டி சொல்லும் பெயரை மட்டுமே பதிவுசெய்து கொள்ளும். அடுத்தமுறை அதே முகத்தைப் பார்த்தவுடன் அவரது பெயரையும், அவர் இங்கே இருக்கிறார் என்பதையும் உங்கள் காதுகளில் சொல்லும்.
பொருட்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் இதேபோல் நீங்கள் சொல்லும்போதோ அல்லது முன்னரே பதிவு செய்தோ வைக்கப்பட்டு இருந்தால், அவற்றைப் பார்த்தவுடன் உங்களுக்குச் சொல்லும். இதேபோல் பணம் எவ்வளவு என உங்கள் விரலை அதன்மீது வைத்ததும் சொல்லிவிடும்.
எலக்ட்ரானிக் கருவி தானே, இதை ஹேக் செய்துவிட்டால் என்கிற பயம் தேவையற்றது. MY EYE இல் நடைபெறும் அனைத்துச் செயல்பாடுகளும் அந்தக் கருவியினுள்ளே நடைபெறுபவை. வெளியிலிருந்து எந்த இணைப்பும் தேவையில்லை மற்றும் கொடுக்கப்படுவதில்லை. இதனால் இதனை ஹேக் செய்வது இயலாத காரியம்.
Tags: New Gadget, Gadget for Blinds.