வாழ்க்கையில் ஒந்த ஒரு விடயத்திற்கும் இந்த இரண்டுமே இருந்தால்தான் அது இயல்பானதாக இருக்கும். செல்போன் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
தொலை தூரத்தில் இருப்பவருடன் தொடர்பு கொண்டு பேச உருவாக்கப்பட்டது தொலைபேசி. அதன் வழி வந்ததுதான் செல்பேசி. இது நம் அனைவருக்கும் தெரியும். அதில் உள்ள வசதிகள்தான் எத்தனை? எத்தனை?
கற்பனைக்கு எட்டியதையெல்லாம், தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாக்கி, இன்று இளைஞர்கள் ஒவ்வொரு கையிலும் செல்லிடப்பேசி விளையாடுகிறது. அவசிய பொருளாக மாறிவிட்டது.
அதில் இணையம் பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கையோ கோடிக் கணக்கில். கணினியில் பாவிக்கும் அத்தனை விடயமும் கையடக்க செல்பேசியில் உள்ளது.
ஸ்மார்ட்போன் என்றழைக்கப்படும் திறன் பேசிகள் செயல்படுவதில் அதிக வல்லமை படைத்தவை. அதில் பயன்படுத்தும் ஆப்ஸ் எனும் செயலிகளோ எண்ணற்றவை. பயனுள்ளவை.
பயனற்ற பயன்பாடுகளும், செயலிகளும் கூட உண்டு.
அத்தியாவசியம், அவசியம் என்ற நிலையில் இருப்பவைகள் சில.
அநாவசியம், தேவையில்லாதவை என்ற நிலையில் இருப்பவைகளோ பல பல.
இளைஞர்கள் கையில் எது கிடைத்தாலும், அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அதில் என்னென்ன செய்யக்கூடாதோ, அவைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பவர். குறிப்பாக பதின்பருவத்தில் உள்ளவர்களின் குறும்புகார செயல்பாடுகள் அப்படி இருக்கும்.
செல்லிட பேசியில் உள்ள வசதிகள் மிக மிக அதிகம். அதில் உள்ள ஆபத்துகளோ அதைவிட அதிகம்.
சமீபத்திய ஆய்வுப்படி மொபைல் போன்களுக்கு அடிமைகளாக மாறி வரும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் 80% அதிகமான மாணவர்கள் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர்.
அதில் ஆப்ஸ் எனப்படும் செயலிகளை அதிகமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக பொழுது போக்கு அம்சங்கள் கொண்ட Android Games App போன்றவைகளை அதிகம் விரும்புகின்றனர்.
மொபைல் போனை பேசுவதற்கான பயன்படுத்துபவர்களின் சதவிகிதம் 26% மட்டுமே.
நாளொன்றிற்கு நான்கிலிருந்து ஏழு மணி நேரம் 76% சதவிகிதம் பேர் பயன்படுத்துகின்றனர்.
சமூக இணையதளங்கள், கூகிள் தேடல் மற்றும் பொழுது போக்கு வீடியோ பார்வையிடல் போன்றவையே இவர்களின் முதன்மை விருப்பமாக இருக்கிறது.
சமூக இணையதளங்களிலிருந்து தங்களுக்கும் வரும் தகவல்களை பார்க்க இவர்கள் காட்டும் ஆர்வம் அதிகம்.
அதுவே சில நேரங்களில் பதற்றமாக தொற்றிக்கொள்கிறது.
இதுபோன்ற செயல்களால் மாணவர்களின் கல்வி, எதிர்கால திட்டங்கள் போன்றவை பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டு, இயல்பு வாழ்விலிருந்து திசை திரும்பி, அதிலிருந்து மீள முடியாத நிலைக்கு ஆளாகின்றனர்.