Wednesday, January 22, 2025
Homecricketஓய்வுக்குப் பிறகும் எனது காலம் கிரிக்கெட்டில் தான் முடியும் - தோனி ருசிகர பேட்டி !

ஓய்வுக்குப் பிறகும் எனது காலம் கிரிக்கெட்டில் தான் முடியும் – தோனி ருசிகர பேட்டி !

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தோனி விளையாடத் துவங்கி 15 வருடங்கள் கடந்திருக்கின்றன. உச்சபட்ச புகழையும், மிகக் கடுமையான விமரிசனங்களையும் இந்த 15 வருடங்களில் தோனி எதிர்கொண்டிருக்கிறார். துவக்க காலத்தில் அதிரடியாக விளையாடி, அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்திய தோனி, பின்னர் மெல்ல மெல்ல தனது ஆட்டப் போக்கை மாற்றி அமைத்துக் கொண்டார்.

இன்றைய நிலையில் வெகு அரிதாக மட்டுமே, அவரிடமிருந்து சிக்ஸர்களையோ அல்லது பவுண்டரிகளையோ நம்மால் பார்க்க முடிகிறது. எனினும், தனது ஆட்ட வகைமை சார்ந்த தெளிவான புரிதல் தோனியிடம் இருக்கிறது. அவர் விரும்பியேதான் இந்த மாற்றத்தை நிகழ்த்திக்
கொண்டார்.

dhoni oivu

இந்திய கிரிக்கெட் அணிக்கு சீரான நம்பிக்கை அளிக்கின்ற ஆட்டம்தான் தேவையே தவிர, எந்த நொடியிலும் விக்கெட்டை பறி கொடுத்து, சூழலை மேலும் சிக்கலாக்குகின்ற ஆட்ட வகை தேவையில்லை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார் தோனி. போலவே, அதிரடியாக விளையாடுகின்றவர்கள் நீண்ட காலம் கிரிக்கெட்டில் உயிர்ப்புடன் விளையாடும்வதும் சிரமமான செயலாகும். தொடர்ந்து அதிரடியாகவே விளையாடிக் கொண்டிருந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, உடல் உபாதைகள் உண்டாகவும் சாத்தியம் இருக்கிறது.

தோனி கூடுதலாக, ஒரு இன்னிங்க்ஸ் முழுமைக்கும் ஸ்டம்புகளின் பின்னால் குனிந்த நிலையிலேயே இருக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது. அதனால், பல்வேறு மனக் கணக்குகளின் வாயிலாக தோனி, மெல்ல தன்னையொரு நிதான ஆட்டக்காரராக தகவமைத்துக் கொண்டார் தோனி. ஒரு காலத்தில் மிகுந்த அபாயகரமான ஆட்டக்காரர் எனக் கருதப்பட்டவர், இன்று பிற வீரர்களின் திறன்களை வளர்த்தெடுப்பதிலும், அணியை வெற்றியின் திசையில் நகர்த்திச் செல்வதையும் மட்டுமே இலக்காக கொண்டு விளையாடி வருகிறார். பேட்டிங்கை விடவும் கீப்பிங்கின் போதுதான் அதிக சுறுசுறுப்புடன் இருக்கும் தோனியை நம்மால் பார்க்க முடிகிறது.

புகழ்பெற்ற முன்னாள் மேற்கிந்திய தீவு அணி வீரரான ஐயன் பிஷாப் தோனி குறித்து, ‘கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவையாய் இருக்கிறதென்றால், பதற்றம்
பவுலருக்குதான் உண்டாகுமே தவிர, தோனிக்கு அந்த ரன்களை எடுப்பதில் எவ்வித சிரமமும் இல்லை’ என்று முன்பொரு முறை தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இன்றைய நிலையில் இது போன்ற சூழல் நிலவுகிறது என்றால், தோனி தன்னோடு இணைந்து எதிர்புறத்தில் நிற்கின்ற மற்ற சக அணி வீரரின் மீதுதான், இந்த அழுத்தத்தை கையளித்து விடுவார். ஒரு சிங்கிள் எடுப்பதன் மூலமாக, எதிர் திசைக்கு சென்றிடவே தோனி முயற்சிப்பார். உடன் விளையாடுகிறவர் பவுலராகவோ அல்லது பேட்டிங் திறனற்றவராகவோ இருந்தால் மட்டும், இந்த இலக்கை முயற்சித்துப் பார்க்கலாம் என்று துணிவுடன் பந்தை எதிர்கொள்வார்.

தோனியின் இத்தகைய போக்கிறகு, அவர் தனது பேட்டிங் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையின்மை என்பது காரணமல்ல. மிகக் குறைவான காலத்திலேயே பலத்த அதிர்வுகளை தோனி உருவாக்கிவிட்டதால், அவரது ஒவ்வொரு சிறு நகர்வும் அதிக கூர்மையுடன் கவனிக்கப்படுகிறது. அனைத்து போட்டியிலும் தோனி சிறப்புற விளையாட வேண்டுமென்கின்ற எண்ணம் இயல்பாகவே பார்வையாளர்களிடத்தில் பெருகி இருக்கிறது.

பெரும் சாதனை நாயகனாகவும், சாகச உருவாகவும் தோனி கருதப்படுகிறார். இது இயல்பாகவே, ஒருவிதமான நிர்பந்தத்தை தோனிக்கு உருவாக்கி விடுகிறது. அவர் எதிர்கொள்கின்ற ஒவ்வொரு பந்தின் மீதும் எதிர்பார்ப்பு கவிந்திருக்கிறது.

இந்தச் சூழல் தோனிக்கு பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கிவிடுகிறது. அவர் சிறிதளவு சொதப்பிவிட்டாலும், பலத்த விவாதங்கள் அவரது ஆட்டத்திறன் மீது எழுப்பப்படுகின்றன. அதனால், தோனி பெரும்பாலும், தனது இருப்பை கூடுமான வரையில் அணியின் கூட்டுழைப்பில் கரைத்துக் கொள்வதையும், தன் மீது கவிகின்ற எதிர்பார்ப்பை பிறரிடத்தில் பகிர்ந்து அளித்து விடுவதையுமே தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

எனினும், ஒருபுறம் தொடர்ந்து எதிர்வினைகள் வந்த படியேதான் இருக்கிறது. குறிப்பாக, அவர் ஓய்வு குறித்து சிந்தித்தாக வேண்டும் என்கின்ற குரல் தொடர்ச்சியாக ஒருபுறம் கேட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இந்த குரலில் அடர்த்தி கூடியபடியே இருக்கிறது. ஆனால், தோனியின் மன உறுதியை இது போன்ற குரல்கள் அசைத்து விடவில்லை.

அவர் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியபடியே இருக்கிறார். இந்த வருடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது, தோனியின் மீதான எதிர்ப்பு குரல்கள் பலமாக ஒலித்துக் கொண்டிருந்தன. எவ்வித சலனத்தையும் காண்பிக்காமல், தொடரின் மூன்று போட்டிகளிலும் அரை சதம் கடந்து தொடர் நாயகன் விருது பெற்று தனது எதிர்பாளர்களின் குரல்களை தற்காலிகமாக அடக்கியிருக்கிறார் தோனி.
 எட்டு வருடங்களுக்கு பிறகு, அவர் பெற்றிருக்கும் தொடர் நாயகன் விருது இது. கடைசியாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக 2011-ம் வருடம் தொடர் நாயகன் விருது பெற்றார்.

தோனியின் மீது வைக்கப்படுகின்ற பிற குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, முன்னாள் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான சேவாக், காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் போன்றோர் தொடர்ந்து விளையாட முடியாமல் போனதற்கு தோனியே முழுமுதற் காரணம் என்பது. இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.

அணி வீரர்களிடத்தில் இயல்பாக கவிந்திருக்க வேண்டிய ஒழுங்கமைதி குலையும் வகையில் நடந்து  கொள்வது, சரிவர ஃபீல்டிங் செய்ய முடியாதது, தொடர்ச்சியான ஃபார்ம் அற்ற நிலை போன்றவையோடு, பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கின்ற நோக்கிலும் தோனி மூத்த வீரர்களை அணியில் இருந்து ஓரம் கட்டினார். அவருக்கு சுறுசுறுப்புடன் இயங்குகின்ற இளைஞர்கள்தான் தேவையாய் இருந்தார்கள்.

சர்வதேச அளவில் பல அணிகள் மூத்த வீரர்களுக்கு விடை கொடுத்து புத்துயிர்ப்பு பெற்று பெரும் பலத்துடன் திகழ்ந்து கொண்டிருந்தன. அவர்களுக்கு நிகராக, இந்திய அணி உருவெடுக்க வேண்டுமென்றால், சில கடின முடிவுகளை கையில் எடுத்துத்தான் ஆக வேண்டும் என்கின்ற நிலை இருந்தது. அதோடு குறிப்பிட்ட வயதுக்கு மேல் யாராக இருந்தாலும் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிவிட வேண்டும் என்பதே தோனியின் கருத்து. தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்துச் சொல்லும்போதுகூட, ‘10,000 ரன்களை கடந்துவிட்டதும் சர்வதேச களத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய அணியில் தோனியின் இருப்பு மிக அவசியமானது. அதுவும் உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர் நடைபெறவிருக்கும் சூழலில், தோனியின் அனுபவம் நிச்சயமாக இந்திய அணிக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இத்தனைக்கும், இன்றைய இந்திய அணியை மெல்ல ஒருங்கிணைத்து வளர்த்தெடுத்தவர் தோனிதான்.

அதனால், அணி வீரர்கள் ஒவ்வொருவரையும் பற்றிய சாதக பாதக மதிப்பீடுகள் தோனியிடத்தில் தெளிவுற உண்டு. அணி வீரர்களை எந்தச் சூழலில் எப்படி திறம்பட பயன்படுத்துவது என்பதை கோலியுடன் இணைந்து தோனியும் செயல்படுத்துவார். தலைசிறந்த கேப்டனாக கருதப்படுகின்ற தோனி, நவயுக இளைய துடிப்பு மிக்க கேப்டனாக இருக்கும் கோலிக்கு எதிர்வருகின்ற உலக கோப்பையில் பெரும் பலமாக இருப்பார் என்று நம்பலாம்.

உலக கோப்பை தொடர் முடிவடைந்ததும், தோனி கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவார் என்று கருதப்படுகிறது. அப்படி நிகழ்கையில், அவ்விடத்தில் ஒரு பெரும் வெளி நிரப்படப்படாமல் இருக்கும். எப்படி சச்சினின் மாற்றாக ஒருவரை நம்மால் முன்மொழிய முடியாதோ, அது போலவே தோனியின் இடத்தையும் பிறிதொருவரால் நிரப்பிவிட முடியாது.

அத்தகைய தாக்கத்தை பட்டித் தொட்டி எங்கும் உருவாக்கியவர் தோனி. சச்சினுக்கு பிறகான இந்திய அணியில் தோனியின் பெயர் மட்டுமே ஊர்புறங்களில் வசிப்பவர்கள் வரையில் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எப்போதும் தனது உணர்வுகளை வெளியில் காண்பித்துக் கொள்ளாத, ஆனால், மிகுதியான ஆளுமை உணர்வை அனைவரிடத்திலும் கடத்துக்கின்ற, தலைமை பண்பாளரான தோனி வெகு இயல்பாக அனைவரின் மனங்களையும் கவர்ந்திருக்கிறார். எனினும், கடந்த சில வருடங்களாக தோனியின் மனதை இரண்டு உயிர்கள் முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஸிவா. சாக்ஷியும் தோனியும் மிகச் சிறிய வயதிலேயே அறிமுகமானவர்கள்தான். எனினும் சாக்ஷியின் குடும்பம் ராஞ்சியில் இருந்து டெஹ்ராடூனுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டது. அதனால் வளரும் பருவத்தில் இருவருக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இருந்ததில்லை. பின்காலத்தில் சாக்ஷியை தோனி சந்தித்தது மிகத் தற்செயலாகத்தான்.

2007-ம் வருடத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதாக இருந்தது. அப்போது, ஈடன் கார்டனில் தொடங்கவிருந்த போட்டியில் பங்கேற்க அணி வீரர்கள் தாஜ் பெங்கால் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். மிகச் சரியாக அன்றைய நாளில் ஹோட்டல் மேலாளுருக்கான தனது பயிற்சியின் கடைசி தினத்தில் அங்கு இருந்த சாக்ஷியை தோனியை எதிர்பாராமல் சந்திக்கிறார்.

இயல்பான அறிமுகங்கள் நிகழ்கின்றன. தோனியை பற்றி எதுவும் அறிந்திராத சாக்ஷி, அவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் என்று தோழி ஒருத்தியால் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அதனை நம்பவில்லை. தன்னிடம் யாரோ விளையாடுகிறார்கள் என்றே கருதியிருந்தார். ஆனால், தோனி பழைய தினங்களின் நினைவுகளால் தீண்டப்பட, சாக்ஷிக்கு தொடர்ச்சியாக மெசேஜ்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

காதல், ஆண் பெண் நெருக்க உறவு போன்றவற்றில் பெரிதளவில் ஈடுபாடு இல்லாத சாக்ஷி தொடக்கத்தில், தோனியை பெரியளவில் கண்டு கொள்ளவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பல வெற்றிகளை குவித்து புகழின் உச்சத்தில் இருந்த தோனி, சாக்ஷியின் மனதை வெற்றிக் கொள்ள முடியாமல் திணறுகிறார். கிட்டதட்ட இரண்டு மாதங்கள் தொடர்ச்சியான போராட்டத்தின் பயனாக, ஒருவழியாக சாக்ஷியின் மனம் தோனியின் மீது பரிவு கொள்கிறது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் துவங்குகிறார்கள்.

இரண்டு வருட காதலுக்கு பிறகு, 2010-ம் வருடம் ஜூலை 4-ம் தேதி தோனிக்கும், சாக்ஷிக்கும் திருமணம் நடைபெற்றது. அதுவரையிலும், இருவரது உறவும் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், முதலில் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இந்த தகவலை நம்புவதற்கே சில நாட்களுக்கு தேவையாய் இருந்தது. ஏனெனில், அது வரையிலும் சாக்ஷியை பற்றி எவரொருவரும் அறிந்திருக்கவில்லை. அதுவும், இந்தியாவின் உச்சபட்ச நட்சத்திரங்களில் ஒருவரான தோனி மிக ரகசியமாக திருமணம் செய்து கொண்டது எல்லோரும் பெரு வியப்பை கிளர்த்திவிட்டது. தோனி – சாக்ஷி.

காதல் உறவைப் போலவே, திருமணமும் அதிக ஆட்களுக்கு தெரியப்படுத்தாமல், மிக நெருக்கமான உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார். குடும்ப உறவுக்கு வெளியில், பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், இயக்குனர் ஃபரா கான், சக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், ஹர்பஜன் சிங், ஆசிஷ் நெஹ்ரா போன்றோர் மட்டும் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்கள். ஒன்றிரண்டு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.

தோனி சாக்ஷி தம்பதியருக்கு 2015-ம் வருடத்தில் மகள் ஸியா பிறந்தாள். தோனி தன்னையொரு பொறுப்புமிக்க குடும்ப தலைவராக அன்றிலிருந்து உணரத் துவங்கினார். மகளின் அண்மையில் கூடுமானவரையில் இருக்க முயற்சித்தார். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம், சாக்ஷியும் ஸியாவும் மைதானத்துக்கு வந்துவிடுவார்கள்.

ஒரு பெரும் நட்சத்திரமாக தோனியின் கள செயல்பாடுகளை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். தோனி இது நாள் வரையிலான தனது கிரிக்கெட் நேசிப்பிற்கு பிறகு, மிகுதியான அக்கறை செலுத்தி வருவது மகள் ஸியாவின் மீதுதான். அவளது நெருக்கத்தில் இருப்பதை பெரிதும் விரும்புகிறார் தோனி. கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு, மகளுடன் அதிக நேரத்தை செலவிடப் போவதாக தோனி தெரிவித்திருக்கிறார்.

தோனி சர்வதேச அரங்கில் நிகழ்த்தியிருக்கும் பல மயக்கங்கள் இன்னும் பல காலம் வைத்துப் போற்றப்படும் என்பதில் பிறிதொரு கருத்து இருக்க முடியாது.
கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களுக்கு அவர் ஆதர்சமாக திகழ்கிறார். தோனி என்பது ஒரு மந்திரச் சொல்லைப் போலவே கிரிக்கெட் வெளியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வீரராக தனது பங்களிப்பை செலுத்தியவாறே, ஒட்டுமொத்த பிற இந்திய வீரர்களையும் கட்டுப்படுத்தவும், ஆட்டத்தின் போக்கில் எதிர் அணியின் மீது அழுத்தத்தை உருவாக்கவும் தோனி தவறுவதில்லை. தான் கேப்டனாக இருந்தாலும், இல்லாவிடிலும் துவக்க காலத்தில் இருந்து தனது அபிப்ராயங்களை முன் வைத்தவர் தோனி. அவரது வழிநடத்தலால் உருதிரண்ட இன்றைய இந்திய அணி, தோனி அணியில் இருக்கின்ற வரையில் அவரது கருத்துகளுக்கு முழுமையாக செவி சாய்ப்பவர்களாகவே இருப்பார்கள். தலைமை பொறுப்பில் இருந்தபடியே தோனி செய்திருக்கும் சாதனைகள் அப்படியானவை.

ஒரு மிகச் சிறந்த தலைமை பண்பாளருக்கான முன்னுதாரணமாக திகழ்கின்ற தோனிக்கு, இனி தனிப்பட்ட வாழ்க்கையில் நல்லதொரு பொறுப்புமிக்க குடும்பத் தலைவராக இருக்க வேண்டிய சவால் முன்னெழுந்துள்ளது. பெரிதும் நெருக்கடி மிகுந்த பின்னணியில் இருந்து உருவான மகேந்திர சிங் தோனி, தன் மகளுக்கு அவள் ஆசை கொள்ளும் அத்தனையையும் கொண்டு வந்து சேர்கின்ற நிலையில் இருக்கிறார். தந்தையும், மகளும், காதல் மனைவியுமாக இனியான அவரது வாழ்க்கை நகரும்.

குடும்பபொறுப்புகளுக்கு மத்தியில் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றதும் தனக்கு வேறொரு வேலையும் காத்திருக்கிறது என்கிறார் தோனி. ‘ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்றதும், அன்றைய தினத்தின் நினைவாக ஸ்டம்பை சேகரித்து கையோடு எடுத்துச் செல்வது எனது வழக்கம். ஆனால், அந்த ஸ்டம்புகளில் அன்றைய தினத்தை பற்றிய குறிப்பு எதுவும் இது வரையில் நான் எழுதியிருக்கவில்லை. எனது ஓய்வு காலத்தில், பழைய போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தபடியே, ஸ்டம்புகளை தேடி கண்டுபிடித்து, அதில் அன்றைய தினத்தின் குறிப்பை பதிவு செய்துகொள்வேன். ஓய்வுக்கு பிறகான எனது காலமும் ஸ்டம்புகளுடன்தான் கழியும்’ .

Source: www.dinamani.com

RELATED ARTICLES

Most Popular

Recent Comments