Monday, December 23, 2024
Homecinemaஇதற்காகதான் 365 நாட்கள் தொடர்ந்து ஓடியதா பாகவதர் திரைப்படம் ! அட இத்தனை நாள் இது...

இதற்காகதான் 365 நாட்கள் தொடர்ந்து ஓடியதா பாகவதர் திரைப்படம் ! அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே !

பில்வமங்கல் என்ற சமஸ்கிருத புலவர் குறித்து வங்கம், இந்தி மற்றும் தெலுங்கில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சினிமா இந்தியாவுக்கு வருவதற்கு முன் பில்வமங்கலின் கதை சிந்தாமணி என்ற பெயரில் நாடகமாக நடிக்கப்பட்டது.

சினிமா வந்த பிறகு மௌனப்படமாக எடுக்கப்பட்டு, சினிமா பேச ஆரம்பித்தபின் மீண்டும் பல மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

பில்வமங்கல் என்ற பெயரில் பல்வேறு சமஸ்கிருத புலவர்கள் வரலாறு நெடுக இருந்து வந்திருக்கிறார்கள். சிந்தாமணி கதையில் வருகிறவர் வாரணாசியை சேர்ந்தவர்.

அவர் சிந்தாமணி என்ற பெண்ணின் மீது மோகம் கொள்வார். சிந்தாமணி கிருஷ்ணனின் தீவிர பக்தை. பில்வமங்கலத்தின் சிந்தாமணி மீதான காதல், இறுதியில் கிருஷ்ணர் மீதான பக்தியாக மாறும்.

1937 இல் ஒய்.வி.ராவ் சிந்தாமணி நாடகத்தைத் தழுவி அதனை திரைப்படமாக எடுத்தார். அவரே பில்வமங்கலமாக நடிப்பதாகத்தான் ஏற்பாடு. பிறகு என்ன நினைத்தாரோ, தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நடிகராக இருந்த செருகுளத்தூர் சாமாவை பிரதான வேடத்தில் நடிக்க வைப்பதென ஆலோசித்து, கடைசியில் தியாகராஜ பாகவதரை நாயகனாக்கினார்.

சிந்தாமணி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் கன்னட நடிகை அஸ்வத்தம்மாவை அறிமுகப்படுத்தினர். அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இது. அப்போது அவர் பாகவதரைவிட தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்றவராக இருந்தார். படத்தின் டைட்டிலில் அவரது பெயருக்குப் பிறகே பாகவதரின் பெயர் இடம்பெற்றது.

சிந்தாமணியில் செருகுளத் தூர் சாமா கிருஷ்ணராக நடித்தார். பாபநாசம் சிவன் படத்துக்கு இசையமைத்தார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டது. குறிப்பாக ராதே உனக்குக் கோபம் ஆகாதடி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி கல்ட் அந்தஸ்தைப் பெற்றது.

அந்த காலகட்டத்தில் வெளிவந்த அனைத்துப் படங்களையும் விட தயாரிப்பு நேர்த்தியில் சிந்தாமணி சிறந்திருந்தது. படம் ஒரே திரையரங்கில் 365 நாள்களுக்கு மேல் ஓடி, ஒரு வருடம் ஓடிய முதல் தமிழ்ப் படம் என்ற பெயரைப் பெற்றது.

இதே வருடம் பாகவதர் நடிப்பில் வெளியான அம்பிகாபதி திரைப்படமும் ஒரு வருடம் ஓடியது. அப்படி ஒரே வருடத்தில் இரு ஒரு வருட படங்கள் தந்த ஒரே நடிகரானார் தியாகராஜ பாகவதர்.

சிந்தாமணியில் அறிமுகமான அஸ்வத்தம்மா அதன் பிறகு ஒரேயொரு தமிழ்ப் படத்தில் மட்டுமே நடித்தார். 1939 இல் காசநோயால் அவர் இறந்தார். ஆரம்பகால தமிழ் சினிமாக்களில் பெரும்பாலானவை இன்று நம்மிடையே இல்லை.

அரிதாக சாதனைப் படம் சிந்தாமணியின் பிரதி இப்போதும் உள்ளது. அதன் அருமையான இசையை, பாடல்களை இப்போதும் கேட்டு மகிழலாம்.

1937 மார்ச் 12 வெளியான சிந்தாமணி தற்போது 86 வது வருடத்தை நிறைவு செய்து 87 வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது. இந்தப் படத்தை சிறப்புற இயக்கிய ஒய்.வி.ராவ் நடிகை லட்சுமின் தந்தை, நடிகை ஐஸ்வர்யாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments