tnpsc

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா-தங்கை குரூப் 2 தேர்வில் தேர்வு !

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கை குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். தேனி மாவட்டம் தெப்பம்பட்டியைச் சேர்ந்த கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற காசாளர் சக்திவேல் அவர்களின் மகள்கள்  திவ்யா 27, சரண்யா 25. இவர்கள் 2019 பிப்ரவரியில் நடந்த குரூப் 2 மெயின் தேர்வில் பங்கேற்று இருந்தனர்.

தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியிருந்த இவர்களுக்கு தேர்வு முடிவுகள் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. நேற்று முன்தினம் வெளியான தேர்வு முடிவில் அக்கா தங்கை இருவரும் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்தது.

சரண்யா பி.எஸ்சி., பி.எட்., (கணிதம் பட்டதாரி. 2017 ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி, 2018 ல் குரூப் 4 ல் தேர்ச்சி பெற்றார். தற்போது ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக உள்ளார். இந்த ஆண்டு வெளியான குரூப் 3 ல் தேர்ச்சி பெற்று, விருதுநகரில் கூட்டுறவு இளநிலை ஆய்வாளர் பணி கிடைத்தது. இப்பணிக்கு செல்ல அவர் விரும்பவில்லை.

இந்நிலையில் அவர் குரூப் 2 மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.நேர்முக தேர்வில் நகராட்சி ஆணையர், சார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் போன்ற உயர் பதவிகளை தேர்வு செய்யலாம்.

இவரது அக்கா திவ்யா, பி.இ., படித்தவர். குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் நேர்முக தேர்வில் பங்கேற்கவில்லை. தற்போது இவரும் குரூப் 2 மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இது பற்றி சரண்யா கூறியதாவது:10ம் வகுப்பில் இருந்தே தேர்வுக்குத் தேவையான study materials தொகுத்து வைத்திருந்தேன். அது வெற்றிக்கு மிகவும் உதவிகரமானதாக இருந்தது. போட்டி தேர்வு எழுதுவோர் தேர்வு நேரத்தில் படிக்காமல் தொடர்ந்து படிக்க வேண்டும்.ஒருமுறை நன்கு படித்து விட்டால் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு அது உதவும். மேலும் 4 பேர் சேர்ந்து குழுவாக படிப்பது பயன்தரும். நான் பணியில் இருந்தாலும் ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறேன். இனியும் இருப்பேன்.

தேனி மாவட்டத்தில் உள்ள திண்ணை பயிற்சி மையத்தில் இலவசமாக ஒன்றரை ஆண்டுகள் படித்தோம். அது மிக பயனுள்ளதாக இருந்தது. சமூக பொறுப்புள்ளவர்களாக மாற்றியுள்ளது. குரூப் 2 தேர்வு ல் மட்டுமில்லாமல் குரூப்1 தேர்விலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது, என்றார்.

திவ்யா, சரண்யா உட்பட தேனி திண்ணை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் மொத்தம் 7 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.