tech news

பலாத்கார வீடியோ முடக்கம்: மத்திய அரசுக்கு உத்தரவு

பலாத்காரம் மற்றும் குழந்தை பாலியல் வீடியோக்களை இணையதளத்தில் முடக்குவது குறித்து, ‘கூகுள், யாகூ’ உள்ளிட்ட இணைய தளங்கள், ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப்’ போன்ற சமூக வலைதளங்களுடன் இணைந்து செயல்படும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

balathkaram video

பலாத்காரம், கூட்டு பலாத்காரம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வீடியோக்கள், இணையதளத்தில் பரப்பப்படுவதை தடுக்கக் கோரி, பிரஜ்வாலா என்ற அரசு சாரா அமைப்பு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தது. இதை பொது நலன் வழக்காக எடுத்து, உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, இந்த வீடியோக்களை இணையதளத்தில் பார்ப்பதை தடுப்பது குறித்து ஆராயப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள், மதன் பி லோகுர், யு.யு. லலித் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது; அப்போது, அமர்வு தன் உத்தரவில் கூறியுள்ளதாவது: கூகுள், யாகூ உள்ளிட்ட இணையதளங்கள், பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைதளங்களின் பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு, இதுபோன்ற வீடியோக்களை இணையதளத்தில் முடக்குவது குறித்து, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளன. அந்த அமைப்புகளுடன் இணைந்து, வீடியோக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனே எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு, தன் உத்தரவில் கூறி உள்ளது.