movie review, tamil movie review, இருட்டு, சினிமா விமர்சனம்

இருட்டு – பட விமர்சனம்

நடிகர்/இயக்குனர் சுந்தர் சி நடித்துள்ள படங்களில் இது ஒரு வித்தியாசமான படம். கம்பீர முறுக்கு மீசையுடன் போலீஸ் அதிகாரியாக வரும் சுந்தர் சியின் பார்வை அபாரம்.

இருட்டு – தமிழ் திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: சுந்தர்.சி, சாக்ஷி சவுத்ரி, தன்ஷிகா, விமலாராமன், யோகி பாபு மற்றும் பலர்
தயாரிப்பு: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்ட்மென்ட்
இயக்கம் : வி.இசட்.துரை
இசை : கிரிஷ்
வெளியான நாள் : 6 டிசம்பர் 2019
நேரம் : 2 மணிநேரம் 12 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5

இருளும், தனிமையும் உங்களை பயமுறுத்துமானால், இந்த இருட்டு நிச்சயம் மிரட்டும்!

இஸ்லாமிய மக்களும், அவர்களின் நம்பிக்கைகளும் எனச்சொல்லி பின்னப்பட்டிருக்கும் கதை. ஒலிக்கும் மந்திரங்களும், தனித்துவமான இசையும் காட்சிக்கு காட்சி அச்சம் விதைக்கின்றன.

முன்னொரு காலத்தில் துாக்கிலிடப்பட்டவர்களின் ஆன்மாக்களால் சிஹாபுரா ஹள்ளி மக்களுக்கு பேராபத்து வர, காவல் அதிகாரியாக காப்பாற்ற வருகிறார் சுந்தர் சி. வருபவர் நிச்சயம் தெய்வீக பிறவியாகத் தான் இருக்க வேண்டும்; அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அவர் உடலில் ஒரு மச்சமும் இருக்க வேண்டும் எனும் மரபுப்படி அவரும் அப்படியே இருக்க, துஷ்ட சக்திகள் மீதான சம்ஹாரம் துவங்குகிறது.

iruttu tamil movie review

மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னும் ஒலிக்கும் பாடல்கள்; வெளிச்சத்தில் மறைந்து இருட்டில் புலப்படும் உருவங்கள்; கதவை வெறி கொண்டு உலுக்கும் ஓசைகள்; பயத்திற்கு இடையிலான காதல் முத்தங்கள்; இருள், மழை, இடி, அலறல் என, திகில் கதைக்கு தேவையான அத்தனை உருப்படிகளும் திரைக்கதையில் உண்டு. இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த ஆன்மாவோட சக்தி பலமடங்கு அதிகரிக்கப் போகுது – இவ்வசனமும், அது சார்ந்த காட்சியும் காலம் காலமாக திகில் படங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், முதன்முறையாக பார்ப்பது போல் நம் மனம் பதற்றம் கொள்வது, துரை வி.இசட்டின் இயக்கத்திற்கான வெற்றி!

கிராபிக்ஸ் பாம்பும், மீனும் பார்வைக்கு உறுத்துகின்றன. பச்சை வண்ணத்தில் எரியும் நெருப்பை பார்த்து, சார்… அது பச்சை கலர்ல எரியுது சார்; அது நிச்சயம் சாதாரண தீயா இருக்காது சார் என்றபடி வி.டி.வி., கணேஷ் பதறுகிறார். இப்படியான ஒருசில காயங்களை கழுவி விட்டால், இருட்டு பயம் ஊட்டுகிறது.

இருட்டு – காளான் – செம திகில்.